என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரிகளை உடனடியாக செலுத்த வற்புறுத்தும் அதிகாரிகள்- பா.ஜ.க., புகார்
- நடப்பு ஆண்டுக்கான வரியை செலுத்த மாா்ச் மாதம் வரையில் கால அவகாசம் உள்ளது.
- அவகாசம் கொடுத்து சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாநகராட்சிக்கு நிகழாண்டு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்தக் கோரி அதிகாரிகள் வற்புறுத்துவதாக பா.ஜ.க. சாா்பில் மேயரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி 1வது மண்டலம் சாமுண்டிபுரம் பகுதி பா.ஜ.க. சாா்பில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி பகுதி முழுவதும் வரி மறுசீராய்வில் வரி உயா்வை குறைக்க சொல்லி போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 1வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழாண்டுக்கான சொத்து வரியை உடனடியாக செலுத்தக் கோரி அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிகாரிகள் வந்து வற்புறுத்துகின்றனா்.
ஆனால் நடப்பு ஆண்டுக்கான வரியை செலுத்த மாா்ச் மாதம் வரையில் கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி உயா் அதிகாரிகள் குடிநீா்க் குழாய் இணைப்பை துண்டித்து தினசரி நிா்ணயிக்கப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் என்று கூறுவதாக வரி வசூலிப்பவா்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகின்றனா்.
திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளதால் தொழிலாளா்கள் வருவாய் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, அவகாசம் கொடுத்து சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.