என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவெண்ணை நல்லூர் அருகே சாக்கடை கழிவுநீரை அகற்ற கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
- திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் சாக்கடை நீர் ,கழிவு நீர், மழை நீர் நீண்ட நாட்களாக தெருவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
- இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ,இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேற்கு தெருவில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் சாக்கடை நீர், கழிவுநீர், மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் பொதுமக்கள் இதனை கடந்து செல்ல முடியாமலும் சுகாதார சீர்கேடு, நோய்கள் பரவுவதாகவும் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும், இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர். அந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபால கிருஷ்ணன், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக தெருவில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், தெருவின் நடுவே உள்ள மின்கம்பத்தினை அகற்றவேண்டும். புதிய சாலை அமைக்கவேண்டும் என கூறினர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். அதன் பேரில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.