என் மலர்
உள்ளூர் செய்திகள்
அண்ணா நகர் பூங்கா கோபுரத்தை பார்க்க குவிந்த பொதுமக்கள்- செல்பி எடுத்து உற்சாகம்
- கோபுரத்தின் மீது செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
- 12 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டு உள்ள அண்ணா நகர் பூங்கா கோபுரத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அண்ணா நகர்:
சென்னை, அண்ணா நகரில் உள்ள டவர் பூங்கா பிரபலமானது. இங்கு 12 அடுக்கில் 135 அடி உயரத்தில் கோபுரம் உள்ளது.
இந்த கோபுரத்தின் மீது ஏறி பார்க்க சென்ற சில காதல் ஜோடிகள் தற்கொலை செய்ததால் கடந்த 2011-ம் ஆண்டு பாதுகாப்பு கருதி கோபுரத்தின் மீது ஏறி பொதுமக்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பல ஆண்டுக்கு மூடிக் கிடந்த கோபுரம் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.44 லட்சம் செலவில் தடுப்பு வேலி, ரூ.11 லட்சம் செலவில் நடைபாதை, குளத்தை சுற்றி தடுப்பு வேலி, ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ.97 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
கோபுரத்தின் மீது செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட அண்ணா நகர் பூங்கா கோபுரத்தை பார்க்க பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்கா கோபுரத்தை பார்க்க குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் பூங்கா பகுதி முழுவதும் களை கட்டியது.
புதுப்பிக்கப்பட்ட நீரூற்று, வண்ண ஓவியத்தை அவர்கள் பார்த்து ரசித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்கள் 135 அடி உயர கோபுரத்தில் ஏறி அண்ணா நகரின் அழகை மேலே நின்றபடி ரசித்தனர். ஏராளமானோர் இதனை செல்போனில் செல்பி எடுத்து ரசித்தனர். ஒருமாதம் இந்த கோபுரத்தை பார்க்க இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னர் கோபுரத்துக்கு செல்ல குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப் படும் என்று தெரிகிறது.
12 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டு உள்ள அண்ணா நகர் பூங்கா கோபுரத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.