என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி வியாபாரி பலி
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பாப்பாத்தி (வயது 50). வெங்காய வியாபாரியான இவர் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் சந்தைகளுக்கு சென்று வெங்காய வியாபாரத்தில் ஈடுபடுவார்.
இந்தநிலையில் நேற்று அரியலூரில் நடைபெற்ற சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்ற பாப்பாத்தி இரவில் இரூர் திரும்பிக்கொண்டிருந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாப்பாத்தி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.