search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதியை ரூ.100 கோடியில் மறுசீரமைக்க அனுமதி
    X

    மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதியை ரூ.100 கோடியில் மறுசீரமைக்க அனுமதி

    • சென்னை கடற்கரைப் பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கடற்கரைப் பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டும்.

    சென்னை :

    தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வசதித்துறையின் மானிய கோரிக்கையின்போது அமைச்சர் சு.முத்துச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையுடன் கலந்தாலோசித்து மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப்பகுதியில், மறு சீரமைப்பு மற்றும் புத்தாக்கப்பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் சென்னை பெருநர வளர்ச்சிக்குழுமத்தால் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ஹித்தேஷ்குமார் மக்வானா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னையின் கடற்கரைப் பகுதி எண்ணூர் முதல் கோவளம் வரையில் நீண்டுள்ளது. இது இயற்கையான நீண்ட கடற்கரைப் பகுதியாகும்.

    இந்த கடற்கரைப் பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். இதில் குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகள் மக்கள் அதிகளவில் பொழுதுபோக்குக்காக கூடும் பகுதிகளாகும். இவை தவிர மேலும் 20 பகுதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் கடல் அரிப்பு மற்றும் மண் குவியல் இந்த கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 3 கி.மீ. பகுதி, கடல் அரிப்பாலும், 7 கி.மீ. பகுதி மண் குவியலாலும் பாதிக்கப்படும் என்று 2018-ம் ஆண்டு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால், சென்னை கடற்கரைப் பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் (சி.எஸ்.ஆர்.ஆர்.) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ், தற்போது மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்பகுதி ரூ.100 கோடியில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, இப்பகுதியில் மரத்தால் ஆன நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.

    மேலும் மக்கள் பங்களிப்பின் அடிப்படையிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த தனித்துவமான நிர்வாக அமைப்புடன் கூடிய சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர் செயலாளர் பரிந்துரைத்துள்ளார்.

    இதை பரிசீலித்த தமிழக அரசு, ரூ.100 கோடியில் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க முன் அனுமதியளித்துள்ளது. அந்த சிறப்பு நோக்கு அமைப்பில், வீட்டுவசதித்துறை செயலாளரை தலைவராகவும், வனத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், டுபிட்கோ தலைவர் உள்ளிட்ட 15 பேரை உறுப்பினர்களாகவும், பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளரை தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

    திட்டத்துக்கான ஒப்பந்தம் கோருதல் உள்ளிட்ட பணிகளை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×