search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் சீண்டல்- உதவி ஜெயிலரை செருப்பால் அடித்த இளம்பெண் மீதும் போலீசார் வழக்கு
    X

    சிறுமிக்கு பாலியல் சீண்டல்- உதவி ஜெயிலரை செருப்பால் அடித்த இளம்பெண் மீதும் போலீசார் வழக்கு

    • கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை ஞானஒளிவுபுரம் ஏ.டி.எம். மையம் அருகே தனியாக வருமாறு பாலகுருசாமி அழைத்திருந்தார்.
    • விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் பாலகுருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் கைதி ஒருவர் மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சிறையில் இருந்தபோது அவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அந்த ஓட்டலுக்கு உதவி ஜெயிலர் பாலகுருசாமி அடிக்கடி சாப்பிட சென்றுள்ளார்.

    அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நட்பாக பழகிய அவர், ஓட்டல் உரிமையாளரின் திருமணமாகாத மகள் மற்றும் 14 வயது பேத்தி ஆகியோரின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை ஞானஒளிவுபுரம் ஏ.டி.எம். மையம் அருகே தனியாக வருமாறு பாலகுருசாமி அழைத்திருந்தார். இத்தகவலை சிறுமி தன் தாத்தா, பாட்டி, சித்தியிடம் கூறவே, அவர் கூப்பிட்ட இடத்துக்கு இருவரும் உடன் சென்றனர். அங்கு வந்த பாலகுருசாமி சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த சாலையில் பாலகுருசாமியை கடுமையாக திட்டியவாறு கைகளாலும், காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி சரமாரியாக தாக்கினார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    இதனை பார்த்தும், பகிர்ந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்த பலர் பெண்ணுரிமையை காக்கும் லட்சணம் இதுதானா..., என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அச்சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் பாலகுருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே உதவி ஜெயிலரை பொது இடத்தில் பலரது முன்னிலையில் தாக்கியதாக முன்னாள் சிறை கைதி, அவரது மகள் ஆகியோர் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது இந்திய தண்டனை சட்டம் 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 355 (ஒருவரை அவமதிக்கும் வகையில் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தந்தை, மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×