என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி விபத்தில் இறந்த சில நாட்களில் போலீஸ்காரர் எரித்துக்கொலை?- ஒரே இடத்தில் நடந்த 2-வது சம்பவம்
- ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
- கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்த புறவழிச்சாலையில் உள்ள ஈச்சனோடையில் கடந்த 4-ந்தேதி காலை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சாக்கு மூடை ஒன்று கிடந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது சாக்கு மூடையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுடன், ஒரு பெண்ணின் கால் வெளியே தெரியும் நிலையில் கிடந்தது. மேலும் சாக்கு மூட்டை முழுவதும் ரத்தக்கறையாகவும் காணப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த இந்திராணி (வயது 70) என்றும் தெரியவந்தது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலரான அவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில், வில்லாபுரம் மற்றும் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சந்தேகப்படும்படியான சந்திரசேகர் (50), அமர்நாத் (38) இருவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நகைக்காக இந்திராணியை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகிலேயே நேற்று மாலை பாதி எரிந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மனைவியின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட மலையரசன், மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அங்கு மனைவியின் சிகிச்சை தொடர்பான கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்துள்ளார். அதன் பிறகு அவர் என்ன ஆனார், எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அவர் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.