என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு
- பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி வரும் வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதால் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- வரும் ஆடி மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்குவதால் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் காய்கறிகள், சிறுதானியங்கள், மலர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்பொழுது மாவட்டத்தில் சம்பங்கி, சாமந்தி, குண்டுமல்லி, சன்னமல்லி, காக்டா கனகாம்பரம், ஜாதிமல்லி, பன்னீர் ரோஸ், நந்தியாவட்டம், உள்ளிட்ட மலர்களை அதிகப்படியாக சாகுபடி செய்து வருகின்றனர்.
சாமந்தி, கோழி கொண்டை உள்ளிட்ட சில மலர்கள் பருவம் இல்லாததால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.மேலும் மாலை கட்டுவதற்கு பயன்படும் சம்பங்கி பூ மற்றும் பன்னீர் ரோஸ் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், மாலூர், பெங்களூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி வரும் வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதால் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஆடி மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்குவதால் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இன்று தருமபுரி பஸ் நிலைய பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ 300 ரூபாய், சன்னமல்லி கிலோ 200 ரூபாய், குண்டுமல்லி கிலோ 220 ரூபாய், காக்டா கிலோ 240 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 240 ரூபாய், மூக்குத்தி பூ 120 ரூபாய், அரளி 40 முதல் 80 ரூபாய், வரையும் பன்னீர் ரோஸ் 60 ரூபாய், நந்தியாவட்டம் 300 ரூபாய், என விலை விற்பனை செய்யப்பட்டது.
தினமும் அதிக அளவில் தேவைப்படும் சம்பங்கி பூ கிலோ 15 ரூபாய்க்கு படுவீழ்ச்சியில் விற்பனை செய்யப்பட்டது.