என் மலர்
உள்ளூர் செய்திகள்
எந்திர கோளாறால் சுருளியாறு மின்நிலையத்தில் மீண்டும் உற்பத்தி நிறுத்தம்
- 2900 மீட்டர் நீள குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு 220 மீட்டர் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்தது.
- சுருளியாறு நீர்மின்நிலையத்தில் குழாய் உடைந்ததால் அதனை சரிசெய்யும் பணி, பெயிண்டிங் பணிகள் நடைபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளாக செயல்படாத எந்திரங்களை முறையாக கவனிக்காததால் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சுருளியாறு மின்நிலையத்திற்கு இரவங்கலாறு அணையில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. இதில் பெரும்பாலான பகுதி வனப்பகுதியில் வருகிறது. இதற்காக 2900 மீட்டர் நீள குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு 220 மீட்டர் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்தது.
இதனைதொடர்ந்து சீரமைக்கும் பணி 2023 ஜனவரியில் தொடங்கியது. 8 மாதங்களாக நடைபெற்ற பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்உற்பத்தியின் போது எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைகளை சரிசெய்து இயக்கி பார்த்தனர்.
டர்பைனில் ஏற்பட்ட கோளாறு ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவால் சீரமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி இரவங்கலாறு அணையில் இருந்து 81 கனஅடிநீர் கொண்டுவரப்பட்டு 20 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் 2 நாட்கள் மட்டுமே மின்உற்பத்தி நடைபெற்றது. அதனைதொடர்ந்து 29-ந்தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சுருளியாறு நீர்மின்நிலையத்தில் குழாய் உடைந்ததால் அதனை சரிசெய்யும் பணி, பெயிண்டிங் பணிகள் நடைபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளாக செயல்படாத எந்திரங்களை முறையாக கவனிக்காததால் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.