என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலம் டவுன் பெரியார் தெருவில் பொது மக்களே அமைத்த காங்கிரீட் சாலை
- பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன.
- வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலைய கடை வீதியில் உள்ள பெரியார் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தங்க நகை ஆசாரி கடைகள் உள்ளன. மேலும் ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் முக்கியமான இந்த சாலை கடந்த சில மாதங்களாக காங்கிரீட் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் சாக்கடை கழிவுகள் தெருவில் தேங்கி நின்று பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து எழுந்து சென்ற நிகழ்வுகளும் நடந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள், வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரியிடமும் பல முறை முறையிட்டனர். ஆனாலும் எந்த பணியும் நடைபெறவில்லை. இதையடுத்து அந்த பகுதி பொது மக்கள் பணம் வசூல் செய்து புதிதாக காங்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்தனர். அதன் படி அந்த பகுதி பொது மக்கள், வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து காங்கிரீட் சாலை அமைத்தனர். தற்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன. அதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே வரும் காலங்களில் பொது மக்களின் அடிப்படை வசதிகளில் தீவிர கவனம் செலுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.