search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் சுகாதார வளாக வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    கம்பத்தில் சுகாதார வளாக வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.


    கம்பத்தில் சுகாதார வளாக வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    • சேனை ஓடையை ஒட்டியிருந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரமில்லாததால் அந்த சுகாதார வளாகத்தையும் பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • கம்பம்மெட்டு சாலையில் உள்ள நவீன சுகாதார வளாகத்தை திறக்க கோரி பெண்கள் ஏ.கே.ஜி. திடல் முன்பு கம்பம் - கூடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடுகளில் போதுமான கழிப்பட வசதி இல்லாததால் கம்பம்மெட்டு சாலையில் உள்ள நகராட்சி பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பொது சுகாதார வளாகம் சேதமடைந்ததையடுத்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுகாதார வளாகம் மூடப்பட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது.

    பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நவீன தூய்மை வளாகம் கட்டப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்து தூய்மை வளாகம் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சுகாதார வளாகத்தை திறக்க கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதற்கிடையில் சேனை ஓடையை ஒட்டியிருந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரமில்லாததால் அந்த சுகாதார வளாகத்தையும் பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கம்பம்மெட்டு சாலையில் உள்ள நவீன சுகாதார வளாகத்தை திறக்க கோரி பெண்கள் ஏ.கே.ஜி. திடல் முன்பு கம்பம் - கூடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், கட்டிட ஆய்வாளர் சலீம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர் அம்பேத்கர் தெரு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். தற்காலிகமாக சுகாதாரமின்றி கிடக்கும் சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன் பேரில் சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக சரி செய்து தருவதாக நகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மேலும் தற்போது நகராட்சியில் ஆணையாளர் பதவி காலி இடமாக உள்ளதால் புதிய ஆணையாளர் வந்தவுடன் வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி நவீன சுகாதார வளாகம் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமலும், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவதியடைந்தனர்.

    Next Story
    ×