என் மலர்
உள்ளூர் செய்திகள்
மது பிரியர்களுக்கு போலீசார் வைத்த எச்சரிக்கை பதாகை
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவில் வளாக பகுதியில் மது குடிக்க வருபவர்களை எச்சரித்து போலீசார் பதாகை வைத்துள்ளனர்
- கோவில் அருகிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா மேல கரும்பிரான்கோட்டையில் பழமை வாய்ந்த வீர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நுழைவு பகுதி மற்றும் அந்த சாலை நெடுகிலும் ஆலங்குடி காவல் துறையினர் எச்சரிக்கை பதாகைகள் வைத்துள்ளனர்.
அதில் இக்கோவிலின் புனிதம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக கோவில் வளாகம் உள்ளே மது அருந்த அனுமதி கிடையாது என்றும், மீறி னால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவிலின் வளாகத்தை சுற்றி உள்ள புதர் காடுகளில் இளைஞர்கள் மறைந்து இருந்து மது அருந்தியதோடு, மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி சென்றுள்ளனர்.
கோவில் அருகிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவிலை சுற்றி விவசய பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில் மது பிரியர்களை கட்டுப்படுத்த ஆலங்குடி காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.