என் மலர்
உள்ளூர் செய்திகள்
12 கிராம மக்கள் திருப்புனவாசலில் சாலை மறியல்
- 12 கிராம மக்கள் திருப்புனவாசலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பறையத்தூர், சோத்திரிவயல், மங்களம், எட்டிச்சேரி, புத்தாம்பூர் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாம்பாற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது.இப்பகுதிகளில் ஓடும் பாம்பாறானது ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டு லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு அறிவித்துள்ள வரம்பு எல்லையை மீறி மணல் அள்ளப்படுவதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனுமதித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விவசாய நிலங்கள் வறட்சியடைந்து காணப்படுவதாகக் கூறி திருப்புனவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்மந்தப்பட்ட ஆற்றுப்பகுதியில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில் தங்கள் பகுதி ஏற்கனவே வறட்சியான பகுதி, குடிதண்ணீர் இன்றி தவித்து வருகிறோம், இந்நிலையில் தற்போது மணல் குவாரி அமைத்து நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தங்கள் பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மணல் குவாரியை இங்கிருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பொதுமக்களை பெரிய அளவில் திரட்டி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.