என் மலர்
உள்ளூர் செய்திகள்
மின்இணைப்புடன், ஆழ்துளை கிணறு அமைக்க மானியம்
- 98 பஞ்சாயத்துகளில் வாழ்வாதாரம் மேம்படுத்த திட்டம்
- விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 98 பஞ்சாயத்துக்களில் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள், உழுவை எந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் உழவன் செயலி வாயிலாக முன் பதிவு ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிம விவரம் (பட்டா, சிட்டா) ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற விவரங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.