என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் கொலையில் வாலிபர் கைது

- பெண் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
- கறம்பக்குடி அருகே தைலமரக்காட்டில் பிணமாக கிடந்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 35). இவரை கடந்த 23-ந்தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பழனியம்மாளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் அப்பகுதியில் உள்ள தைலமரக் காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.
இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி கொத்தக்கோட்டை குடியிருப்பைச் சேர்ந்த பாண்டியராஜன் (19) என்பவர் பழனியம்மாளிடம் தொடர்ந்து நான்கு நாட்களாக செல்போனில் பேசியுள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தனது நண்பர்களின் மூலம் பழனியம்மாளின் செல்போனின் நம்பர் பெற்று பேசியதாக கூறினார். கடந்த 23-ந்தேதி இரவு நேரத்தில் தைல மரக்கட்டில் பழனியம்மாளை கீழே தள்ளியதில் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பாண்டியராஜனை கைது செய்த போலீசார் அவரை ஆலங்குடி நீதிமன்ற நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நான்கு குழந்தைகளின் தாயான பழனியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.