என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
    • 21 பதார்த்தங்களை படைத்து வழிபாடு செய்வார்கள்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப் புள்ளான் விடுதியில் பிரசித்தி பெற்ற கருப்பையா பிள்ளையார் என்கிற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கார்த்திகை தீபம் முடிந்த 21 நாட்களுக்கு விரதமிருந்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொங்கல், எள்ளுருண்டை, அப்பம், சுண்டல் போன்ற 21 பதார்த்தங்களை நாள்தோறும் ஒவ்வொன்றாக படைத்து வழிபாடு செய்வார்கள்.

    பின்னர் 22-ம் நாள் சதய நட்சத்திரம் சஷ்டி திதி ஒன்று கூடிய நாளில் 21 நாட்கள் படைத்த பதார்த்தங்களையும் செய்து விநாயகருக்கு படைத்து வழிபாடு செய்வர்.

    அப்போது பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து விநாய கருக்கு பிடித்த விநாயகர் அகவல் பாடல்களை பாடியும் விநாயகர் நோன்பு கொண்டாடப்படுவதற்கான கதைகளை கூறியும் வழிபாடு செய்வர்.

    இதனைத் தொடர்ந்து மாவிளக்கில் தீயை ஏற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தீயை விழுங்கும் வழிபாடு செய்வர்.

    இவ்வாறு தீயை விழுங்கி வழிபடுவதால் நோய்தீரும், தீயசக்திகள் தொடாது என்றும் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்றும் நம்பப் படுகிறது. இந்த வினோத வழிபாட்டை அப்பகுதி மக்கள் பயபக்தியுடன் கண்டுகளித்தனர். 

    • மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
    • தச்சங்குறிச்சியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நடப்பாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    தூய விண்ணேற்பு அன்னை ஆலய அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி தச்சங்குறிச்சியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 25 பணியாளர்களை கொண்ட 7 மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விழா மேடையில் யார் இருப்பது என்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் மேடையை விட்டு கீழே இறக்கினர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 



    • பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும், அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று.
    • அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ.க்.கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலைஞர் அரசு மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அப்போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று அடங்காப் பிடாரித்தனமாக மறுத்தவர்கள் அவர்கள். கடைசியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி நாங்கள் அன்று நடவடிக்கை எடுக்க வைத்தோம்.

    இன்று நாங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளோம். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இப்பொழுது அ.தி.மு.க. போராட்டம் என்பதெல்லாம் வீண் வேஷம். நாங்கள் இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக அ.தி.மு.க.வினர் இப்படி கபட நாடகத்தை நாடுகிறார்கள்.

    பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும், அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று.

    அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ.க்.கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது. இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார்.

    அது இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்ற மாநிலத்திற்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு வரட்டும்.

    நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம். தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள். எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று நினைப்பதை போல, எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் அண்ணாமலை உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது உடன் எம்.பி.க்கள் எம்.எம்.அப்துல்லா, நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, துணை மேயர் லியகத்அலி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • 3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும்.
    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம்.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக விரோதிகள், பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கட்சியில் சேர்ப்பது, பதவிகளை கொடுப்பது பா.ஜ.க.வே, தவிர வேறு எந்த கட்சியும் இல்லை. இதற்கு ஏற்கனவே பலமுறை ஆதாரத்தோடு பெயர் பட்டியலோடு நிரூபித்து இருக்கின்றோம்.

    தி.மு.க.வில் தெரிந்து நாங்கள் செய்வது கிடையாது. தெரியாமல் எங்கேயாவது நடந்திருந்தால் உடனடியாக கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்படுவார்கள்.



    சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவுக்கே பொதுவான அம்பேத்கரை பற்றி அமித்ஷா கூறியதைப் பற்றி கேட்டால் ஜெயக்குமார் பேசிய கருத்துதான் எனது கருத்து என்று கூறுகிறார். அப்படி கூறுவதற்கு பொதுச்செயலாளர் பதவி எதற்கு.

    பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் கவர்னர் அவருக்கு பிடித்தபடி செய்ய வேண்டும் என்று கூறினால் அதற்கான ஆள் நாங்கள் கிடையாது. நாங்கள் சட்டப்படி செய்கிறோம். சட்டப்படி இல்லை என்றால் யார் வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

    3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும். கவர்னர் 4-வதாக யு.சி.ஜி.யில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் இதுவரை அப்படி யாரையும் சேர்க்கவில்லை. புதிதாக அப்படி யாரையும் சேர்க்க முடியாது என்பதுதான் எங்களது வாதம்.

    இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் போது எங்கள் வாதத்தையும் நியாயத்தையும் எடுத்து வைப்போம். சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரின் கடந்த கால செயல்பாடு தற்போது இருக்காது என்று எண்ணுகின்றோம்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம். எதிர்க்கட்சிகள் சிதறி கிடைப்பது எங்களுக்கு வலிமை தான். ஆனால் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று வர வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் விரும்புவார். தகுதியே இல்லாத ஆட்களோடு போட்டியிட விரும்பமாட்டார். என்றைக்கும் ஆரோக்கியமான போட்டிதான் அவருக்கு பிடிக்கும்.

    நெல்லையில் 2 கொலைகளில் இதுவரை 4 பேரை பிடித்துள்ளனர். போலீசார் துரிதமாக செயல்பட்டுள்ளனர். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. தனிப்பட்ட முன்விரோதத்தில் நடைபெறும் சம்பவங்களை எப்படி முன்கூட்டி தடுக்க முடியும். கோர்ட்டுக்கு வெளியே நடந்த கொலைக்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
    • வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினரக பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய், நூலை வெளியிட்டார்.

    பிறகு, விஜய் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய விஜய், 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்றார்.

    2026 தேர்தல் கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸாகும் என விஜய் பேசிய நிலையில் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

    கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸூம் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை.

    நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சி தான் நடத்துகிறோம்.

    வாரிசு என்ற அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கவில்லை.

    வேங்கைவயல் விவகாரம் குறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.

    வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்எல்ஏவோ தலையிடவில்லை.

    சீமான் உடன் நேரடியாக மோத திமுகவுக்கு எந்த பயமுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதுகாப்புக்காக துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பழனிவேல் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது சகோதரர்கள் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், வெட்டன் விடுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.

    இவர்கள் 3 பேரும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்பட்டது.

    3 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் 2022 ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி முருகானந்தம் மற்றும் பழனிவேல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்தது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை வசம் இருந்து பெற்றது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணி முதல் 20 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து சென்று முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

    இதில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் முருகானந்தம் பா.ஜ.க. புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக உள்ளார். பழனிவேல் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தற்போது கரம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாடு அரசு திறந்த புத்தகம்; நாங்கள் தவறு செய்யவில்லை என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
    • அரசை குறை கூறுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும். தமிழ்நாடு அரசு திறந்த புத்தகம்; நாங்கள் தவறு செய்யவில்லை என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். ஊழல் குற்றச்சாட்டு கூறுவதை தவிர பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஞாபக மறதி அதிகம். தனது காலத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த இறப்பும் நேரவில்லை. எங்கு இறப்பு ஏற்பட்டாலும் அரசை குறை கூறுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு.

    புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டி னம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்க ளில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வசதி பெறுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வில்லை. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பருவ நிலை மாற்றம் குறித்து மீன்வளத் துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.
    • பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பால கிருஷ்ணன், சக்திவேல். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருவதோடு, ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பால கிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். 19 மாதம் தவணையாக அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். 15 மாத தவணை தொகை அவர் சரியாக செலுத்தி உள்ளார். ஆனால் கடந்து 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை.

    இதே போல சக்திவேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவரும் சரியாக தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.

    இதன் காரணமாக கடன் தொகையை வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்கள் பாலகிருஷ்ணன், சக்தி வேலுக்கு சொந்தமான வீட்டில் பெரிய அளவில் இந்த வீடு அடமானத்தில் உள்ளது. 3 மாத நிலுவை ரூ.45,204 செலுத்தப்படவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட அந்த கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.

    அவமானத்தால் மனமுடைந்த சக்திவேல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி புத்தி சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளனர். பால கிருஷ்ணனின் மனைவி அவமானம் தாங்க முடியாமல் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.

    இது குறித்து சக்திவேல் கூறும்போது, தவணை தொகையை சரியான காலத்தில் செலுத்தி வந்தோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக எங்களது தாயாரின் உடல் நிலை கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால், வைத்திருந்த பணம் மருத்துவத்திற்காக செலவிடப்பட்டு விட்டது. 3 மாத தவணையை எப்படியும் செலுத்தி விடுவோம் என்று நாங்கள் பணம் வசூலிக்கும் நிதி நிறுவன ஊழியரிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் இவ்வாறு எங்களை அவமானப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

    இவ்வாறு அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, தவணை தொகை செலுத்தவில்லை என்றால் நிதி நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற அநாகரீகமான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இது மிகவும் தவறு. சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்று அவர் கூறினார்.

    • கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.
    • 2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். சில கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரியதை அரசியலாகத்தான் பார்க்க முடியும். கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.

    2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். முதலமைச்சரை பொருத்தமட்டில் மது விலக்கு வேண்டும் என்று கூறுகிறோம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூட்டணி கட்சிக்கு வருபவர்கள் சீட்டுகளையும் கேட்கிறார்கள், பணத்தையும் கேட்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    • காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பிரத்யேக வார்டு திறக்கப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் 44 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில், மழை, குளிர் என்று சீதோஷ்ண நிலைகள் அடிக்கடி மாறி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 79 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பிரத்யேக வார்டு திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நரிமேடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அப்பகுதியில் நடமாடும் மருத்துவமனை மூலமாக சளி இருமல் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.

    கடந்த மாதம் 44 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    கிராமப்புறங்களில் பலரும் குடும்பம் குடும்பமாய் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். 10 நாட்கள் வரை பாதிப்பு நீளுவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள்தோறும் 44 மருத்துவ முகாம்கள் என்ற அடிப்படையில் ஆயிரத்து 237 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 34 ஆயிரத்து 142 பேருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் 100 நாள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் மேலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
    • பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் சுமார் 36 கிராம பஞ்சாயத்துகளும் அது சார்ந்த கிராமங்களும் உள்ளன.

    இந்த பகுதியில் ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டனர்.

    இதையடுத்து இதற்கு அனுமதி கோரி கடந்தவாரம் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் கொடியேற்று விழா நடத்த அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது.

    இதுபற்றி நிர்வாகிகள் கேட்டதற்கு இன்று, நாளை என்று தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடியேற்றுவது என்று முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை ஒன்றிய த.வெ.க. தலைவர் அருண்பிசாத், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் அய்யாதுரை ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்றினார்கள். தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

    இதுபற்றி நிர்வாகிகள் கூறுகையில், தமிழக வெற்றிக்கழக கொடி ஏற்று விழாவுக்கு முறைப்படி அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தனர்.

    பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும். வீடுகளில் ஏற்ற அனுமதி தேவை இல்லையே என எண்ணி எங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றியுள்ளோம். இதுவரை சுமார் 2 ஆயிரம் வீடுகளில் கொடி ஏற்றப்பட்டு உள்ளது என்றனர். 

    ×