என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் வசூலித்த பணத்தை கையாடல் செய்த 2 ஊழியர்கள்
- நோயாளிகளை சேர்க்கும் பிரிவில் முறைகேடு நடந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேல் புறநோயாளிகளும் 5 ஆயிரம் உள் நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள்.
சிக்கலான தீராத நோய் பிரச்சனைகளுக்கு அனைத்தும் மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் சிறப்பாக கிடைப்பதால் அறை எடுத்து தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். பிற மாநில நோயாளிகளுக்கு கட்டணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்ஸ்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் இருப்பதால் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை சேர்க்கும் பிரிவில் முறைகேடு நடந்துள்ளது. பல வருடங்களாக ஆவண கிளார்க்காக பணியாற்றி வரும் பெருங்குளத்தை சேர்ந்த குபேரன்(50), ஆவடியை சேர்ந்த கலைமகன் (42) ஆகிய இருவரும் சேர்ந்து ஆஸ்பத்திரி பதிவேட்டில் போலி கணக்கு எழுதி பணம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. கடந்த மே மாதம் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை முடித்து வீட்டிற்கு போகும் முன்பு அட்மிஷன் கவுண்டரில் பணம் செலுத்தி உள்ளனர். அந்த பணத்தை இருவரும் கையாடல் செய்து விட்டு போலி ஆவணங்கள் தயாரித்து வைத்துள்ளனர்.
மேலும் இருவரும் சேர்ந்து ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து டீன் தேரணிராஜன் ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி குபேரன், கலைமகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாக அலுவலகத்தில் பணம் கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புறநோயாளிகள் அட்மிஷன் விவரங்கள் முழுவதும் ஆய்வு செய்யப்படுகின்றன.
வெளி மாநிலத்தவர்கள் எத்தனை பேர் சிகிச்சை பெற்றர்கள். அவர்களிடம் பெறப்பட்ட பணத்தை ஆஸ்பத்திரி கணக்கில் செலுத்தாமல் மூடி மறைத்தது எப்படி? இதற்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.