search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தைகள் பள்ளி செல்லும் வழித்தடங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்
    X

    பெண் குழந்தைகள் பள்ளி செல்லும் வழித்தடங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்

    • கலெக்டர் பேச்சு
    • பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளிலும் சோதனை செய்ய அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான அவசர மைய தொலைபேசி சைல்ட் லைன் 1098 ஆலோசனைக் கூட்டம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்சோ தொடர்பான வழக்குகளை கையாளும் போது குழந்தைகளை பெற்றோர்கள் வழக்குப்பதிய தவறும் பட்சத்தில் குற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடுகிறது. இதுகுறித்து செய்திகள் வெளி வரும் போது அவமானம் என கருதி புகார் அளிப்பதை தவிர்க்கின்றனர்.

    எனவே விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடவும், குறிப்பாக பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஏனென்றால் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கான சட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொண்டால் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முன் வருவார்கள். இதனால் தவறு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.

    பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும், பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்பும் போதும் முக்கிய வழித்தடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளை கண்காணித்து கடைகளில் என்னென்ன தின்பண்டங்கள் விற்கப்படுகிறது என ஆய்வு செய்ய வேண்டும்.தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் சாக்லேட் வடிவில் கூட விற்பனைக்கு வருகிறது.அதனை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து கடைக்கு சீல் வைத்து, கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சைல்ட் லைன் 1098 விழிப்புணர்வு குறித்து மின்னணு திரைகள் வைக்க அனைத்து வட்டங்களிலும் இடம் தேர்வு செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சைல்ட் லைன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்டத்தின் பொது மேலாளர் மோகனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், மாவட்ட நீதிபதி நவீன் துரைபாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம், நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×