என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை உயர்த்தி கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்
- அன்புமணி ராமதாஸ் பேட்டி
- ராணிப்பேட்டையில் பா.ம.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. இன்னாள் முன்னாள் பொறுப்பாளர்கள் சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதைதொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்கி சரியான நிர்வாக கட்டமைப்பு உருவாகவில்லை.
ஆந்திராவில் உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதுமட்டுமின்றி தடுப்பணை உயர்த்துவது என திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனை கடுமையாக நாங்கள் கண்டிக்கிறோம். பாலாறு கர்நாடகாவில் தொடங்கி 86 கி.மீ. தொலைவிற்கு 18 தடுப்பணை கர்நாடக அரசு கட்டியுள்ளது. ஆந்திரா குப்பம் பகுதியில் 22 கி.மீ. தூரத்தில் 32 தடுப்பணை கட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டின் எல்லை பில்லூர் பகுதியில் 223 கி.மீ சென்று சதுரங்கபட்டினம் கடலில் கலக்கிறது.கடந்த 5 ஆண்டு முன்பு வரை பாலாற்றின் குறுக்கே ஒரே ஒரு தடுப்பனை மட்டும் தான் இருந்தது. அதுவும் வாலாஜா பகுதியில் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்டது.தற்போது 3 தடுப்பனை கட்டி இருக்கிறார்கள் அது போதுமானது இல்லை.
பாலாற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கிமீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். பாலாற்றின் குறுக்கே அடுத்த 10 ஆண்டுகளில் 20 தடுப்பணைகளை கட்டப்பட வேண்டும். அதற்கு அரசு திட்டமிட வேண்டும். இந்த பகுதியை சார்ந்தவர் தான் நீர்வளத்துறை அமைச்சர் அவருக்கு அன்பான வேண்டுகோள் ஆந்திரா அரசு தடுப்பனை உயர்த்தும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அமைச்சர் நேரடியாக சென்று ஆந்திர முதலமைச்சரை சந்திக்க வேண்டும். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பனை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டு அதற்கு நிதியும் ஒதுக்கி இருக்கிறார்கள். இது சம்மந்தமாக என் தலைமையில் ஆர்.கே.பேட்டை பகுதியில் ஆர்பாட்டம் நடத்தினோம். தமிழக அரசு குறிப்பாக அமைச்சர் ஆந்திர முதல்வரை சந்தித்து இந்த திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.
பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலை சுத்தகரிப்பு ஆலைகள் சரியான முறையில் செயல்பட வில்லை. சுற்றுச்சூழல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.