என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி வசிஷ்டநதியில் உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

- வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
- கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக்டோபர் மாதம் 23-ந் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அக்டோபர் மாதம் 24-ந் தேதி மாலை முதல் இரவு வரை தொடர்ந்து 4 மணி நேரம் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.
26-ந்தேதி அதிகாலை அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல், இன்று அதிகாலை விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.