என் மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை நகர மக்களின் குடிநீருக்கு கைகொடுக்கும் ரெட்டேரி ஏரி தண்ணீர்- 1.8 கி.மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிப்பு
- அதிகரித்து வரும் மக்கள் தொகையால் கோடைகாலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
- ரெட்டேரி ஏரி தண்ணீரை சென்னையில் குடிநீருக்கு பயன்படுத்த ரூ.22 கோடியில் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
கொளத்தூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் இருந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
அதிகரித்து வரும் மக்கள் தொகையால் கோடைகாலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரை குடிநீருக்கு சுத்திகரித்து பயன்படுத்த குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி ஏரி தண்ணீரை சென்னையில் குடிநீருக்கு பயன்படுத்த ரூ.22 கோடியில் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
ரெட்டேரி ஏரி சுமார் 280 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த ஏரியில் 133 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
தண்ணீரை சுத்திகரித்து அனுப்ப கொளத்தூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்தி கரிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இதற்காக ரெட்டேரி ஏரியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு வர 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த சுத்திகரிப்பு நிலையம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரூர் ஏரிக்குப் பிறகு, ரெட்டேரி ஏரியில் இருந்து நகருக்கு குடிநீர் வினியோ கிக்கும் வசதிகளை குடிநீர் வாரியம் மேம்படுத்தி வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `2019-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மாற்று ஏற்பாடாக ரெட்டேரி ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டது. போரூர் ஏரியின் அடிப்படையில் ரெட்டேரி ஏரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து ரூ.22 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கொளத்தூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட்டேரி தண்ணீர் அனுப்பப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பே ரெட்டேரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தண்ணீர் மாதிரிகளை அவ்வப்போது பரிசோதித்த போது நீரின் தரம் மேம்பட்டு இருந்தது என்றனர்.