என் மலர்
உள்ளூர் செய்திகள்
முருங்கைக்காய் கிலோ ரூ.500 வரை விற்பனை
- மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது.
- காய்கறி கடையில் ஒரு முருங்கைக்காய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போரூர்:
கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் அதிக அளவு விற்பனைக்கு வருவது வழக்கம். அங்கு தற்போது சீசன் முடிந்துள்ளதால் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது.
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினந்தோறும் 1200 மூட்டைகளில் முருங்கைக்காய் வரும். ஆனால் இன்று வெறும் 200 மூட்டைகளில் மட்டுமே வந்தது. இதனால் அதன் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரையிலும் வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.500 வரையிலும் விற்கப்படுகிறது. காய்கறி கடையில் ஒரு முருங்கைக்காய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான காய்கறி வியாபாரிகள் விற்பனைக்கு முருங்கைக் காய் வாங்குவதையே நிறுத்தி விட்டனர். முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சம் அடைந்து வருவதால் இல்லத்தரசிகள் சமையலுக்கு முருங்கைக்காய் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்.
இதேபோல் மொத்த விற்பனையில் தக்காளி விலையும் ஏறத்தொடங்கி உள்ளது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கு விற்பனை ஆனது.
வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன. கேரட், அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது.
மேலும் வெங்காயம் ரகத்தை பொறுத்து கிலோ ரூ.70 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது,
"கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 1,200 மூட்டைகளில் குவிந்து வரும் முருங்கைக்காய் தற்போது 200 மூட்டைகளில் மட்டுமே வருகிறது. எனினும் விலை அதிகரிப்பால் முருங்கைக் காய் விற்பனை மந்தமாகவே நடக்கிறது. இனி வரும் நாட்களில் ஆந்திராவில் இருந்து அதிகளவில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர தொடங்கும். எனவே வரும் நாட்களில் முருங்கைக்காய் விலை படிப்படியாக குறையும்" என்றார்.