என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடியை பற்றி உண்மைக்கு புறம்பாக பேசுவதா?: விஜயை சாடிய சரத்குமார்
- தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
- மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை என்றார்.
சென்னை:
பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.
பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி. வருவாயை வாங்கிக் கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்துகொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இனி வருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.