என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாலத்தீவில் வேலை வாங்கிதருவதாக மோசடி செய்தவாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

- ராஜசேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.
- மோகனசுந்தர பாண்டியன் (வயது 28) என்பவர் மாலத்தீவில் பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ராஜசேகரன் கூறும்போது, சமூக வலைத்தளமான முகநூலில் மாலத்தீவில் எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாக விளம்பரம் ஒன்று செய்து இருந்தனர்.
அதை பார்த்து தொடர்பு கொண்டபோது, ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மோகனசுந்தர பாண்டியன் (வயது 28) என்பவர் மாலத்தீவில் பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.
பணிகளுக்கு ஏராளமான நபர்கள் தேவை எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து எனது வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்டோரை வேலைக்காக அறிமுகம் செய்தேன். அனைவரிடமும் ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சுமார் 8 லட்ச ரூபாய் பெற்று கொண்டார்.
ஆனால் அதன்பின்னர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நிலையில் தலைமறைவாகி விட்டார். சுமார் ஒரு வருடமாக தேடி வந்த நிலை யில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் சென்று நேற்று அவரை பிடித்து, இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.