என் மலர்
உள்ளூர் செய்திகள்
மினி வேனில் ரகசிய அறை அமைத்து தக்காளி கூடைகள் நடுவே குட்கா பொருட்கள் கடத்தல்
- குட்காவை கடத்தி செல்லும் வாகனங்களை தொடர்ந்து மடக்கி பிடித்து வருகின்றனர்.
- சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் தருமபுரி எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. மேற்பார்வையில் தொடர் சோதனைகள் மூலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யபடுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் மற்ற காவல் நிலைய எல்லைகளை சாதா ரணமாக கடந்து வந்து விட்டாலும் தொப்பூர் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பினால் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் இல்லாத அளவில் குட்காவை கடத்தி செல்லும் வாகனங்களை தொடர்ந்து மடக்கி பிடித்து வருகின்றனர்.
இதேபோல் நேற்று இரவு 8 மணி அளவில் தொப்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், அருள், சம்பத்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் தொப்பூர் கணவாய் அருகே கட்டமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தை திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவர் ஓட்டிவந்துள்ளார். காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்த பொழுது ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததோடு, தான் சேலம் மார்க்கெட்டில் தக்காளிலோடு ஏற்ற செல்கிறேன் என பதில் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக வாகனத்தின் உள்ளே உடைந்த தக்காளி கூடைகளை அடுக்கி வைத்து வந்துள்ளார். தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது கண்டைனர் உள்ளே ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை திறந்து பார்த்த பொழுது 51 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 326 கிலோ எடைகொண்ட 3 லட்சம் மதிப்புடையது. அதனை அடுத்து வாகனத்தின் ஓட்டுனரை விசாரணை செய்ததில் பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு தருமபுரி வழியாக கடத்தி சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் ஓட்டுனரை கைது செய்து வாகனம் மற்றும் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.