என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் இன்று கடையடைப்பு போராட்டம்

- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்.
- போராட்டத்தால் நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்கிறது.
இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் நாமக்கல் நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இதில் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் மருந்து கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை நாமக்கல் நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. நாமக்கல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், நாமக்கல் கோட்டை பகுதியில்உள்ள கடைகள், ஆஞ்சநேயர் கோவில் அருகாமையில் உள்ள கடைகள், பூங்கா ரோடு, தாலுகா அலுவலகம் அருகாமையில் உள்ள கடைகள், மின்சார வாரியம் அருகில் உள்ள கடைகள், மருத்துவமனை அருகில் உள்ள கடைகள், திருச்சி- நாமக்கல் ரோடு, நாமக்கல்- துறையூர் ரோடு, மோகனூர்- சேந்தமங்கலம் ரோடு, சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் மளிகை கடைகள், மருந்து கடைகள், ெஜராக்ஸ் கடைகள், எலக்ட்ரிக்கல் கடை, செல்போன் கடை, நகை கடைகள், பாத்திர கடைகள், ஆட்டோ மொபைல், பழைய இரும்பு கடைகள் என 3000 -க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. முட்டை விற்பனை கடைகள், பேக்கரி கடைகள், பழக்கடைகளும் திறக்கப்பட வில்லை.
இதேபோல் நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், மருந்து வணிகர்கள் தங்களது கடைகளை திறக்கவில்லை. இந்த கடையடைப்பு போராட்டத்தால் நாமக்கல்லில் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தங்கள் தொழில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.