என் மலர்
உள்ளூர் செய்திகள்
முறையூர் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்
- சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
- விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசித்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் ஆனி தேரோட்ட விழா கடந்த வாரம் 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8-ம் நாளான நேற்று மீனாட்சி-சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் மிகுந்த சிறப்புற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் இந்த ஆலயத்தில் ஆனி திருமஞ்சன தேரோட்ட விழா சிறப்பு வாய்ந்ததாகும்.
குறிப்பாக 8-ம் நாளான நேற்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளிய விநாயகர், முருகன், சண்டிகேசுவரர், மீனாட்சி, பிரியாவிடையுடன் சொக்கநாதர் ஆகியோர் எழுந்தருளினர்.
பக்தர்கள் திருக்கல்யாண சீர் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
அதன்பின் திருக்கல்யாண வைபவங்கள் தொடங்கின. மங்கள நாணுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பட்டாச்சாரியார்கள் மாலை மாற்றுதல், திருமாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்வுடன் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசித்தனர்.
நள்ளிரவு வரை நீடித்த இந்த நிகழ்வில் பொதுமக்களும், பக்தர்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார், பரம்பரை பட்டாச்சாரியார் சுரேஷ் குருக்கள் செய்திருந்தனர்.