என் மலர்
உள்ளூர் செய்திகள்
இலங்கை அதிபர் இன்று இந்தியா வருகை: ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த சிங்கள படையினர்
- கைது நடவடிக்கைக்கு பயந்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
- தற்போது வரை 141 தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மண்டபம்:
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். அவர்களுக்கான அனுமதி டோக்கன் வழங்கப்படாத நிலையில் நேற்று முதல் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.
இதையடுத்து நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து 377 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்துரு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியத்தனர். மீண்டும் இந்த பகுதியில் மீன்பிடித் தால் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படுவீர்கள் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.
உடனடியாக கைது நடவடிக்கைக்கு பயந்து ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
இதனால் பெரிய படகுகளுக்கு ரூ.80 ஆயிரம், சிறிய படகுகளுக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக பல ஆயிரம் இழப்புடன் இன்று காலையில் மீனவர்கள் கரை திரும்பினர்.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இன்று இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் இது போன்று தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பிரதமர் இலங்கை அதிபரை சந்திக்கும் போது தமிழக மீனவர்கள் மீன்பிடி வாழ்வாதாரத்தை பாதுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இதே போன்று தண்டனை கைதிகளாக உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு 141 தமிழக மீனவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 45 பேர் விசாரணை கைதிகளாகவும், 96 பேர் தண்டனை பெற்றும் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 198 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.