என் மலர்
உள்ளூர் செய்திகள்
உசிலம்பட்டியில் ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்: பொய் புகார் என்று மாணவ-மாணவிகள் தர்ணா
- மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து தர்ணா.
- மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக விசாரணை.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், நான் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்த புதிதில் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் மூர்த்தி என்னை அடிக்கடி அழைத்து பேசுவார். நான் ஆசிரியர் என்ற முறையில் பேசி வந்தேன்.
ஒரு நாள் அவரது அறைக்கு என்னை மட்டும் வரச்சொன்னார். உள்ளே சென்றபோது என்னை சுவற்றில் சாய்த்து உடல் முழுவதும் முகர்ந்து உதட்டில் முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்டார்.
பின்னர் உனக்கு இது பிடித்திருந்தால் தினமும் இதே மாதிரி செய்கிறேன் என்று என்னை வற்புறுத்தினார். ஆசிரியர் மீதான பயத்தால் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தேன்.
ஆசிரியர் மூர்த்தி ஒருவர்தான் எங்களுக்கு அனைத்து படங்களையும் எடுத்ததால் என்னால் என் படிப்பிற்கு பிரச்சனை வந்து விடும் என்று பயந்து யாரிடமும் சொல்லவில்லை.
மேலும் அவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருந்தததால் இதை வெளியில் சொன்னால் எதுவும் நடக்காது என்று அமைதியாக இருந்துவிட்டேன்.
நாளுக்கு நாள் அத்துமீறல் அதிகமானதால் இதை எனது தோழிகளிடம் சொன்னேன். அவர்கள் உனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை, இதேபோல் இந்த பள்ளியில் பலருக்கு நடந்துள்ளது என்றனர்.
இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் தொடர்ச்சியான தொந்தரவுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.
மேலும் ஆசிரியர் மூர்த்தி ஆசிரியர் என்னிடம் போக போக உனக்கு பழகிவிடும் என்றும், என்னுடைய வாரிசு உன்னுடைய வயிற்றில் வளரும் எனவும் பலமுறை கூறியிருக்கிறார். அவரின் ஆசைக்கு சில சமயம் இணங்க மறுத்ததால் என்னை பயமுறுத்தும் உள்நோக்கத்தோடு உள்ளூர் மாணவர் ஒருவரை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.
எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கவில்லை எனவும் பள்ளி விடுதியில் தங்கி இருக்கும் பெரும்பாலான மாணவிகளுக்கு இந்த மாதிரி பாலியல் தொந்தரவு ஆசிரியர் மூர்த்தியால் நடந்துள்ளது.
இவரின் சீண்டல்கள் எல்லை மீறவே இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோர்களிடம் சொல்லி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து பெற்றோரிடம் சொன்னேன். அதற்கு நீ இறந்ததற்கு பிறகு இந்த உலகத்தில் நாங்களும் வாழ விரும்பவில்லை. ஆகவே மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எனது பெற்றோர்கள் சொன்னதன் பேரில் நடந்த சம்பவத்தைச் சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு மூர்த்தி ஆசிரியரே முழு பொறுப்பாகும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த மனுவில் அதே பள்ளியை சேர்ந்த சில மாணவிகள் தங்கள் கைப்பட எழுதிய மனுவும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் மூர்த்தி என்பவர் மீது மாணவி அளித்த புகார் குறித்து தகவல் அறிந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து பள்ளி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, போலி புகார் மீது நடவடிக்கை எடுக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தி பங்கேற்றனர்.
இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவ, மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களுடன் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
இதற்கிடையே ஆசிரியர் மூர்த்தியிடம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தன்னிடம் டியூசன் படிக்காமல், பலர் மூர்த்தியிடம் டியூசனுக்கு செல்வது பிடிக்காமல் அவர் சில மாணவிகளை ஆசிரியர் மூர்த்திக்கு எதிராக திசை திருப்பிவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆசிரியர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தி உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்த போதிலும், உண்மைத் தன்மை குறித்து கண்டறிய ஒரு குழு அமைத்து ஒவ்வொரு மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக கருத்துக்களை கேட்டு அறிந்தால் மட்டுமே குட்டு வெளிப்படும்.