search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் முரளிதரன் தகவல்
    X

    கோப்பு படம்

    திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் முரளிதரன் தகவல்

    • முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
    • டிசம்பர் 21-ந்தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு 10,000 ரூபாய் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது. "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு" என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் ஆண்டிற்கு தேனி மாவட்ட அளவில் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள்,

    சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று குறள் பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது.

    திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை தேனி மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்திலோ விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 21-ந்தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×