என் மலர்
உள்ளூர் செய்திகள்

துர்காஷ்டமியை முன்னிட்டு நெல்லை சொக்கநாதர் கோவிலில் சூலினி துர்கா ஹோமம்

- கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- கனகதுர்க்கை அம்பாளுக்கு 26 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
திருவிழா காலங்களில் தினமும் மாலை வேளையில் முழு மண்டபத்தில் மீனாட்சி அம்பாளுக்கு பல்வேறு விதமான அலங்காரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் 8-ம் நாளான இன்று துர்காஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி கோவிலில் பிரத்தியங்கரா சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இதற்காக கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு அதில் மகா கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கல்வி, திருமணம், வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொடர்ந்து கிலோ கணக்கில் மிளகாய் வத்தல், உப்பு, வெண் கடுகு, மிளகு ஆகியவை கொண்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலில் அமைந்துள்ள கனகதுர்க்கை அம்பாளுக்கு 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.