என் மலர்
உள்ளூர் செய்திகள்

மன வலிமையால் சாதித்தார் சுனிதா வில்லியம்ஸ் - மயில்சாமி அண்ணாதுரை
- விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
- விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.
கோவை:
9 மாத விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினார். இந்த சாதனை பயணம் குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்த போது, விமான பயணம் என்பது சவாலானதாக இருந்தது. தற்போது அந்த பயணம் எளிதாகி விட்டது. அதேபோன்று தான் இப்போது விண்வெளி பயணமும் மாறியுள்ளது.
விண்வெளி பயணங்கள் என்பது ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு விண்கலம் செல்ல வேண்டும்.
சுனிதா வில்லியம்ஸ் சென்ற போயிங் விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த விண்கலம் ஆளில்லாமல் திரும்பி வந்தது.
இதன் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் அதிக நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கினார். நீண்ட நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கிறார். விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
அவரது உடல், உள்ளம், மனவலிமையே அவர் இவ்வளவு மாதம் தங்க காரணம் ஆகும். அவர் விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் நடைமுறை வாழ்க்கை பழக்கம் ஆவதற்கு சில நாட்கள் ஆகும். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டதும், நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
விண்வெளியில் இருந்து திரும்பி வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் நடைமுறை வாழ்க்கைக்கு பழகவும், இயல்பு நிலைக்கு திரும்பவும் சில நாட்கள் ஆகும்.
தற்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கான காலதாமதத்தின் மூலம் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதன் செல்வது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் 3 அல்லது 4 ஆண்டுகளில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 2 ஆண்டுகளில் ஆளில்லா விண்கலம் செல்லும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.