என் மலர்
உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் பாரில் மோதல்- கட்டிட தொழிலாளியை கொன்ற 2 பேர் கைது
- முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தையகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55) கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு அதிகாரிபட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மதுபானம் வாங்கி டாஸ்மாக் அருகிலேயே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தேத்தாம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (28), காம்பார்பட்டியை சேர்ந்த ரஜினி (42) ஆகியோரும் அதே இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜ், ரஜினி ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகனை தாக்கி கீழே தள்ளினர். நிலை தடுமாறிய முருகன் கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வையில், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சிவராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.
பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். கொத்தனாரை கொலை செய்த குற்றவாளிகளை சில மணி நேரத்திலேயே கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.
கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் சட்டவிரோதமாக பார் செயல்பட்டு வந்ததும், இதன் காரணமாக அடிக்கடி மோதல் சம்பவம் நடந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் சட்ட விரோதமாக செயல்படும் மதுபான பார்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.