என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவன அதிபர்களுக்கு தலா 27 ஆண்டு ஜெயில் தண்டனை
- டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால் தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார்.
- வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை:
திருப்பூரில் கடந்த 2011-ம் ஆண்டு பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றினர். இது தொடர்பாக புகார் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
விசாரணையில் 58 ஆயிரத்து 571 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட (டான்பீட்) சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இரு தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால் தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார்.
அதை தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு இடைக்கால தடையை நீக்கியதோடு, கோவை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பளிக்க கடந்த 5-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பான உத்தரவு நகலை கடந்த 10-ந்தேதி சி.பி.ஐ.தரப்பு வக்கீல், கோவை டான்பீட் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து வழக்கில் 22-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ரவி அறிவித்தார்.
அதன்படி 22-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்ராஜ் தரப்பில் பணம் கொடுக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை 26-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இன்று காலை பாசி மோசடி வழக்கு கோவை டான்பீட் கோர்ட்டில் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, மோசடியில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோருக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.