என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சரை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்த துணை நடிகை
- நடிகை சாந்தினி மணிகண்டனை பார்த்து விட்டு தான் செல்வேன் என்று பிடிவாதம் செய்தார்.
- முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்:
மலேசியாவை சேர்ந்தவர் சாந்தினி (வயது33). சின்னத்திரை துணை நடிகையான இவருடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பழகி வந்தார். இந்த நிலையில் மணிகண்டனால் கர்ப்பமாகி கருகலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியே வந்தார். கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதால் மணிகண்டன் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டிற்கு நடிகை சாந்தினி காரில் இன்று காலை வந்தார். அவர் நான் மணிகண்டனை சந்திக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் மணிகண்டனின் தாய் மற்றும் ஆதரவாளர்கள் மணிகண்டன் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரை பார்க்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இருந்த போதிலும் நடிகை சாந்தினி மணிகண்டனை பார்த்து விட்டு தான் செல்வேன் என்று பிடிவாதம் செய்தார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடிகை சாந்தினியை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் எதற்காக மணிகண்டனை தேடி வந்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் கூறும்போது, இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மணிகண்டனின் அரசியல் எதிரிகள் நடத்தும் நாடகம் என்றனர்.