search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் முடிவடைகிறது: நெல்லையப்பர் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்
    X

    முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் முடிவடைகிறது: நெல்லையப்பர் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்

    • நெல்லை மாவட்டத்திற்கு வந்த அண்ணாமலை, கடந்த 19-ந்தேதி பாளையில் நடைபயணம் மேற்கொண்டார்.
    • காந்திமதி யானையிடம் அண்ணாமலை ஆசிர்வாதம் பெற்றார்.

    நெல்லை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் தனது முதல் கட்ட நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டாா். அப்போது மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு வந்த அண்ணாமலை, கடந்த 19-ந்தேதி பாளையில் நடைபயணம் மேற்கொண்டார். மறுநாள் வள்ளியூர், களக்காடு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, நேற்று ஓய்வெடுத்தார்.

    இந்நிலையில் இன்று மாலை நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டவுனில் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொள்கிறார். இந்த நடைபயணமானது பேட்டை பாறையடியில் தொடங்கி தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை, சொக்கப்பனை முக்கு வழியாக வாகையடி முனையை அடைகிறது. அங்கு மாலையில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசுகிறார்.

    இத்துடன் அவரது முதல்கட்ட நடைபயணம் முடிவடைகிறது. இன்றுடன் சேர்த்து மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை 42 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளார். அவரது 2-ம் கட்ட நடைபயணம் வருகிற 3-ந்தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இன்று காலை அண்ணாமலை நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு காந்திமதி யானையிடம் அவர் ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து கோவிலில் உள்ளே அமைந்துள்ள கோசாலையை பார்வையிட்டார்.

    பின்னர் அண்ணாமலை, டவுன் ஆர்ச் பகுதியில் பழமையான ஒரு ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டார். இந்த நிகழ்வுகளின்போது பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    Next Story
    ×