என் மலர்
உள்ளூர் செய்திகள்
காயல்பட்டினம் கடைகளில் கைவரிசை- செல்போன், கைக்கடிகாரங்களை நிதானமாக திருடும் மர்மநபர்கள்
- அபுதாஹீர் என்பவரது எலக்ட்ரானிக் கடையின் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமிரா பதிவில் மர்மநபர்கள் இருவர் திருடிக்கொண்டிருக்கும் காட்சி தெளிவாக தெரிந்தது.
- கல்லூரி மாணவர்கள் போன்று தெரிந்த அந்த இரு நபர்களும் முக கவசம் அணிந்து காணப்படுகின்றனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது.
இதில் காயிதே மில்லத் நகரில் உள்ள இருசக்கர வாகன உதிரி பாகம் விற்கும் கடையில் ரூ.30 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இது பற்றி கடையின் உரிமையாளர் மகபூப் சுபுஹானி ( வயது 60) ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதேபோல் பெரிய நெசவு தெருவில் உள்ள அபுதாஹிர் என்பவரது எலக்ட்ரானிக் கடையில் செல்போன்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் திருட்டு போயிருந்தன.
அருகிலுள்ள ஷேக் அப்துல் காதர் என்பவரின் டைல்ஸ் கடையில் பணம் மற்றும் செல்போன் திருட்டு போயிருந்தது. இச்சம்பவங்கள் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் இதற்காக சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அபுதாஹீர் என்பவரது எலக்ட்ரானிக் கடையின் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமிரா பதிவில் மர்மநபர்கள் இருவர் திருடிக்கொண்டிருக்கும் காட்சி தெளிவாக தெரிந்தது.
அதில் கல்லூரி மாணவர்கள் போன்று தெரிந்த அந்த இரு நபர்களும் முக கவசம் அணிந்து காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவன் தலையில் தொப்பி அணிந்துள்ளான். இருவருமே 'டிப் டாப் ' உடை அணிந்துள்ளனர்.
கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற இந்த 2 நபர்களும் தாங்கள் வைத்திருந்த செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் நிதானமாக தங்களுக்கு வேண்டிய செல்போன்கள் மற்றும் உயர் ரக கைக்கடிகாரங்களை தேர்ந்தெடுத்து 'ஷாப்பிங்' செய்வதுபோல் உள்ளது. மேலும் இந்த நபர்கள் எந்த வழிகளில் எல்லாம் சென்றனர் என்பது பற்றிய சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த மர்மநபர்கள் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.