என் மலர்
உள்ளூர் செய்திகள்
350 பவுன் நகையுடன் மாயம்- நூதன மோசடியில் ஈடுபட்ட சென்னை தம்பதி
- நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
- கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்:
சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர் (வயது51). இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் (52). சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10 கோடி பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கமிஷனாக ரூ.1 கோடி கொடுத்தால் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். அதற்கு தீபக்தேவ்கர் தன்னிடம் பணம் இல்லை நகைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்தேவ்கர் சஞ்சய் ஜெயின் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டபோது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ளோம். எனவே அங்கு வந்து நகைகளை தருமாறு கூறியுள்ளனர்.
அதன் பேரில் நத்தம் வந்த தீபக்தேவ்கர் பஸ் நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 21-ம் தேதி கடையில் இருந்த 350 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
2 நாட்கள் கழித்து தீபக்தேவ்கர் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடைசிவரை கடன் வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தீபக்தேவ்கர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து நகைகளுடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.