என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர்மழை
- அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்தது.
- கடம்பூர், சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாநகர பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. நேற்றும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அணைகளுக்கு வரும் நீரின் வரத்து சற்று அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மணிமுத்தாறில் 15.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசத்தில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நம்பியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணை பகுதியில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அங்கு 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. குண்டாறு, சங்கரன்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை நீடித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த பகுதியில் சாரல் பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், வைப்பார், சூரன்குடி ஆகிய இடங்களில் நேற்று மதியத்திற்கு பிறகு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பார் பகுதியில் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடம்பூர், சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாநகர பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்தது.