என் மலர்
உள்ளூர் செய்திகள்
வேடசந்தூரில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை- உறவினர்கள் போராட்டம்
- அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றால்தான் அனைத்து வசதிகளும் இருக்கும் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
- சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதம் செய்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியைச் சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில், ஜே.சி.பி. வாகனங்களை வாங்கி விற்பனை செய்தும் வந்துள்ளார்.
இவர் மனைவி முத்துமாரி (35) நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு குமரன் (8) என்ற மகனும், முருகதனம் (11) என்ற மகளும் உள்ளனர். மாசிக்கு சொந்தமாக பெருமாள் கவுண்டன்பட்டியில் தோட்டம் உள்ளது.
நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த தொழிலாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் மீண்டும் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டு இருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்க முயன்றனர்.
இதனால் பயந்து போன மாசி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். தனது பைக்கை அங்கேயே விட்டு விட்டு ஓட முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டினர்.
இதில் மாசியின் ஒரு கை துண்டாகி கீழே விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாசியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டனர். அவர்கள் கொலைக்குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இரவு 11 மணி வரை அவர்கள் அதே இடத்தில் நகராமல் இருந்ததால் பதட்டமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து மாசியின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அங்கு திரண்டு இருந்தவர்கள் மாசியின் உடலை இங்கேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், திண்டுக்கல் எடுத்துச் செல்லக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றால்தான் அனைத்து வசதிகளும் இருக்கும் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதம் செய்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வடமதுரை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றும் 2-வது நாளாக தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.