என் மலர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்- அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து மழை
- சேலம், மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினார்கள்.
- சீர்வரிசை தட்டுக்களுடன் 1000-க்கும் மேற்பட்டோருடன் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் ஊர்வலமாக வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அவரது பெற்றோர் உருவ படங்களுக்கு மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து சாமி கும்பிட்டு விட்டு தொண்டர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
அப்போது வீட்டின் வெளியே தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வரிசையாக நின்று பூங்கொத்து, சால்வை, பூச்செண்டு, சாமி போட்டோ உள்ளிட்டவை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆளுயுர ஆரம், பல்வேறு வகை மலர்கள் ஆன பூ மாலைகள் உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சேலம், மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினார்கள். மேலும் கோவில் பூசாரிகள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து சீர்வரிசை தட்டுக்களுடன் 1000-க்கும் மேற்பட்டோருடன் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் ஊர்வலமாக வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அ.தி.மு.க. மகளிரணி, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி, மாணவர் அணி, வக்கீல் பிரிவு, மகளிர் அணி, விவசாய அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, அ.தி.மு.க. தொழிற்சங்கம் உள்ளிட்ட சார்பு அணியினர் வாழ்த்துக்கள் கூறினர். அதுபோல் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.