என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் அருகே மூதாட்டி கொலை: இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட கணவரும் பலி
- கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை மூதாட்டியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
- பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி இரட்டை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (65).
சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அதிகாலையில் சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். சண்முகம் மீதும் மிளகாய் பொடியை தூவி விட்டு இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். இதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
மறுநாள் காலை சண்முகத்தின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் பேலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை மூதாட்டியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் தனிப்படை டி.எஸ்.பி வின்சென்ட், இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மர்மநபர்களை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகத்தை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி இரட்டை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மர்ம நபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.