என் மலர்
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் ஜெயிலில் அடைப்பு
- சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்தனர்.
- இதனையடுத்து மேச்சேரி போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 10 மணிக்கு மர்மநபர் ஒருவர் போனில் பேசினார். அப்போது அவர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து எச்சரிக்கையான காவல்துறையினர், சேலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மேட்டூர் சென்று, அணையின் மதகு, வலதுகரை, இடதுகரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 57) என்பவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து மேச்சேரி போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், மகாலிங்கத்தை ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து, மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.