search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனவில் தோன்றி தொல்லை... பாம்பு முன்பு நாக்கை நீட்டி பரிகாரம் செய்த விவசாயி
    X

    கனவில் தோன்றி தொல்லை... பாம்பு முன்பு நாக்கை நீட்டி பரிகாரம் செய்த விவசாயி

    • விவசாயி பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட கொடிய விஷமுடைய பாம்பு விவசாயியின் நாக்கை திடீரென கடித்தது.
    • அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை அறுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் தனது மனைவிடம் கூறியுள்ளார். இதையடுத்து கணவன் -மனைவி இருவரும் ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளனர்.

    அந்த ஜோதிடர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றை குறிப்பிட்டு அங்கு உள்ள சாமியார் பாம்புகளை வளர்த்து வருவதாகவும், அவரிடம் உள்ள பாம்புக்கு பரிகாரம் செய்தால் பாவங்கள் நீங்கும். உங்கள் கனவில் பாம்பு வராது என்று தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய அந்த விவசாயி கோவில் பூசாரியிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார். அப்போது தன்னிடம் 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளதாகக் கூறிய அந்த பூசாரி, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து, பாம்பின் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யக் கூறினார்.

    இதனை நம்பிய விவசாயி பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட கொடிய விஷமுடைய பாம்பு விவசாயியின் நாக்கை திடீரென கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை அறுத்துள்ளார். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறவே அந்த விவசாயி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

    இதனையடுத்து அவர் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர் செந்தில் குமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த விவசாயி தற்போது உயிர் பிழைத்துள்ளார்.

    இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர் செந்தில் குமரன் கூறியதாவது:-

    "பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே தவிர மூடநம்பிக்கைகளையும் வீட்டு வைத்தியத்தையும் செய்யக்கூடாது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் நாக்கு வெட்டப்பட்டிருந்தது. அவருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. செயற்கை சுவாசம் கொடுப்பதில் கடும் சிரமங்களை சந்தித்தோம். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அந்த விவசாயியை உயிர் பிழைக்க செய்துள்ளோம். பாம்புக்கடி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பாம்பு கடியுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த விவசாயி குணமடைந்து வீடு திரும்பினார்.

    Next Story
    ×