என் மலர்
உள்ளூர் செய்திகள்
கூடங்குளம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல்- 49 பேர் மீது வழக்கு
- மீனவர்கள் நாட்டுப்படகில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- விசைப்படகு உரிமையாளர் சில்வெஸ்டர் கூடங்குளம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தார்.
நெல்லை:
குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை பகுதியில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது நாட்டுப்படகில் சென்ற மீனவர்கள் கடல் பரப்பில் வைத்து முட்டம் விசைப்படகு மீது நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக விசைப்படகு உரிமையாளர் சில்வெஸ்டர் கூடங்குளம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 36 பேர் மீது கூடங்குளம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் இடிந்தகரையை சேர்ந்த மீனவரான அரசு தங்களது வலைகளை சேதப்படுத்தியதுடன், ஆயுதத்தை காட்டி மிரட்டியதாக விசைப்படகில் வந்த குமரி மீனவர்கள் மீது புகார் அளித்தார். அதன்பேரில் அந்த படகின் உரிமையாளர் மற்றும் அதிலிருந்த 12 பேர் மீது கடலோர காவல் குழுமத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.