என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளம்- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னிமலை:
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் ஒரத்துப்பாளையம் அணையில் 3 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.
அப்போது அணைக்கு வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 99 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 617 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி இருந்தது. அணையிலிருந்து 346 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி சென்னிமலை பகுதியில் 88 மி.மீ மழையளவும், அணைப்பகுதியில் 126 மி.மீ மழையளவும் பதிவாகியது.
நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரில் 1550 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்த உப்புத்தன்மை வெள்ளத்தால் குறைந்து இன்று காலை 980 டி.டி.எஸ். என பதிவானது. ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.