என் மலர்
உள்ளூர் செய்திகள்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்: பொதுமக்கள் உற்சாக குளியல்
- கடந்த 2 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்டப்படி சீசன் தொடங்க வில்லை. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சிறிதளவு தண்ணீர் விழுந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் குற்றாலத்தில் தென்றல் காற்றும் பலமாக வீசி வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி செண்பகாதேவி அருவி, தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்யை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. மேலும் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இரண்டு முறை தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழையின் வேகம் சற்று குறைந்த நிலையில் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் சற்று குறைந்ததால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் இன்று காலை வரை குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச் வலைவை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.
குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட பகுதியில் உள்ள வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து அருவி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.