என் மலர்
உள்ளூர் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை: அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
- சேர்வலாறில் 12 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டே்டுகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நாலுமுக்கு எஸ்டேட்டில் அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 6 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அவற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்ம் நேற்று 100 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 101 அடியை எட்டியுள்ளது. அணையில் 56.33 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.57 அடியை எட்டியுள்ளது. நேற்றைய அளவை விட 11/2 அடி உயர்ந்துள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்பட்டி வினாடிக்கு 1068 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறில் 12 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 354 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 35 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.49 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 24 அடியாகவும், நம்பியாறு அணை நீர் மட்டம் 12.49 அடியாகவும், 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை 32 அடியாகவும் உள்ளது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டத்தில் நாங்குநேரி, கன்னடியன் கால்வாய் பகுதி, அம்பை உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு மாநகர பகுதியில் மழை பெய்தது. பழைய பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றாலம் சாலையில் இருந்து வழுக்கோடை வரையிலும் மழையினால் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கொட்டிய மழைக்கு நடுவிலும் மின் ஊழியர்கள் இன்று அதிகாலை 2 மணி வரையிலும் போராடி பழுதை சரி செய்தனர்.
இன்றும் காலை 6 மணி முதல் மாநகரில் பரவலாக மழை பெய்தது. பாளை கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம், கிருஷ்ணா நகர், தியாகராஜநகர், என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலைய பகுதி, டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் நேற்று மாலை 7 மணி முதல் கனமழை கொட்டியது. குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. சாத்தான்குளத்தில் 20.30 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் ஆகிய இடங்களில் இரவில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், இன்றும் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. மணியாச்சி, வேடநத்தம் ஆகிய இடங்களிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
உடன்குடி மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியான குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, பெரியபுரம் மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, கொட்டங்காடு, கந்தபுரம், நேசபுரம், செட்டியாபத்து, தண்டுபத்து, சீர்காட்சி, நயினார் பத்து, செட்டிவிளை, சிதம்பரபுரம், பிச்சிவிளை, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், வாகைவிளை, வேப்பங்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் விட்டு, விட்டு மழை விடிய, விடிய பெய்தது.
இன்றும் காலை 10 மணி அளவிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் முக்கிய சாலைகள், தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் பழைய கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்தன. உடன்குடி மேல பஜாரில் வேப்ப மரங்கள் முறிந்து விழுந்தன.
இன்று விடுமுறை தினம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர். இதனால பஜார் வீதிகள் |வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் இப்பகுதியில் உள்ள அனைத்து குளம், குட்டைகள் முழுமையாக நிரம்பும், இதனால் இந்த ஆண்டு மீண்டும் விவசாய பணிகள் தொடர்ந்து செய்ய முடியும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லை. ஆனாலும் புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமான அளவில் கொட்டுகிறது. விடுமுறை தினத்தையொட்டி அங்கு குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
அணை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 2 1/2 அடி உயர்ந்து 109 அடியை கடந்துள்ளது. கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 76.30 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும் உள்ளது.