search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார் ஜே.பி. நட்டா- வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை
    X

    தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார் ஜே.பி. நட்டா- வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை

    • ஜே.பி.நட்டா வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருப்பதால் வெற்றி பெறுவதற்கான பணிகளை பாரதிய ஜனதா இப்போதே தொடங்கி விட்டது.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

    அந்த வகையில் ஜே.பி. நட்டா, தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக ஜே.பி.நட்டா இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அவர் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

    ஓட்டலில் கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனையின் போது பா.ஜனதா வெற்றிக்கு வாய்ப்புள்ள தொகுதிகளின் விவரங்கள், தேர்தல் பணிகளை தொடங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி தீவிர களப்பணியாற்ற கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பாரதிய ஜனதாவின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று வெற்றிக்கனியை பா.ஜ.க. வசமாக்க வேண்டும் என நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் ஜே.பி. நட்டா தமிழகத்தில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டதுடன் பிரசாரத்தையும் தொடங்கி உள்ளார். ஆலோசனை முடிந்ததும் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

    பின்னர் மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து கார் மூலமாக ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையத்திற்கு செல்கிறார். அங்கும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    தொடர்ந்து காரமடை அருகே தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடக்கும் வாஜ்பாய் பிறந்த நாள் நல்லாட்சி தின பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கட்சி தொண்டர் வீட்டிற்கு செல்லும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அங்கு இரவு உணவு சாப்பிடுகின்றனர்.

    பின்னர் ஜே.பி.நட்டா அங்கிருந்து கார் மூலமாக கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு இரவில் தங்கும் ஜே.பி.நட்டா நாளை(28-ந் தேதி) காலை 10 மணிக்கு கோவை விமானம் நிலையம் வந்து, விமானம் மூலம் புவனேஸ்வரத்திற்கு செல்கிறார்.

    ஜே.பி.நட்டா வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×