என் மலர்
உள்ளூர் செய்திகள்
வெளிநாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழகம் வளர்ந்து வருகிறது- கனிமொழி பேச்சு
- உலகத்திலேயே மருத்துவ சிகிச்சை தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகிறது.
- அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
திருச்செந்தூர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் சித்தா பிரிவு புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்திலேயே மருத்துவ சிகிச்சை தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகிறது. மக்களை தேடி மருத்துவம், மக்களுக்காக மருத்துவம் போன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளை கூட மிஞ்சும் அளவுக்கு மருத்துவம் வீட்டுக்கு கொண்டு சென்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் சிகிச்சை அளிக்க கூடிய நமது அரசு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு.
இந்த திட்டம் மூலம் உடல் நலம் குன்றி வீட்டில் இருக்கும் முதியோருக்கு அவர்கள் இல்லம் சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
பள்ளி குழந்தைகளுக்காக அவர்கள் பசியோடு படிக்க முடியாமல் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டம் போன்று காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அடுத்த ஆண்டு எல்லா பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டம் கிடைக்கும் தமிழகம் எல்லா துறையிலும் முன்னேறி வெளிநாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்று பேசினார். தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொன்னது போல கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், கடைக்கோடி மனிதனுக்கும் இந்த அரசு மருத்துவ வசதி சிறப்பாக செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து திருச்செந்தூர் அருகில் உள்ள நத்தைகுளத்தில் நடைபெறும் காய்ச்சல் முகாமை மருத்துவம் மற்றும் கனிமொழி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.